இந்தியாவில் போலி ரேபிஸ் தடுப்பூசி: ஆஸ்திரேலியா எச்சரிக்கை! | Rabies Vaccine |

இந்தியாவில் ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Australia Warns of Fake Rabies Vaccines in India, Advises Revaccination for Travellers
ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட மாதிரி படம்.
2 min read

இந்தியாவில் போலி ரேபிஸ் தடுப்பூசி புழக்கத்தில் இருப்பதாகவும் அதைப் போட்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்தியாவில் இந்தியன் இம்யூனலாஜிகல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் அபய்ரேப் என்ற ரேபிஸ் தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. தாங்கள் தயாரித்து வரும் அதே அபய்ரேப் என்ற பெயரில் போலியான ரேபிஸ் தடுப்பு மருந்து புழக்கத்தில் இருப்பதை இந்நிறுவனம் 2025 தொடக்கத்தில் கண்டுபிடித்தது. பார்ப்பதற்கு உண்மையான அபய்ரேப் மருந்தைப் போலவே இருக்கும் வகையில், அப்போலி மருந்து தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

அபய்ரேப் என்பது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ரேபிஸ் தடுப்பு மருந்தாகும். ஆனால், இதே பெயரில் புழக்கத்தில் இருக்கும் போலி மருந்தில் மருத்துவக் கலவைகளின் அளவு மாறுபட்டு இருக்கிறது. ஆனால், தடுப்பு மருந்து இருக்கும் வயலை (Vial) பார்த்தால் உண்மையான மருந்தா போலியானதா என்பதைக் கண்டறிய முடியாத வகையில் போலி மருந்து விற்கப்பட்டு வந்திருக்கிறது.

ரேபிஸ் தடுப்பு மருந்து என்பது அத்தியாவசியமானது. ரேபிஸ் நோய்க்கான அறிகுறி ஒரு முறை தென்பட்டு விட்டால், ஏறத்தாழ மரணம் உறுதி தான். காரணம், இந்த வைரஸ் நேராக மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. அதுவும் கடந்த சில மாதங்களாகவே நாய்க்கடிப் பிரச்னை நாடு முழுக்கப் பூதாகரமாகியிருக்கிறது.

இதற்கு மத்தியில் தான் போலி ரேபிஸ் தடுப்பு மருந்து புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தில்லி, மும்பை, அஹமதாபாத் மற்றும் லக்னௌ ஆகிய இடங்களில் போலி மருந்து இருப்பது சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டிருக்கிறது. இது மேலும் பல இடங்களில் பரவியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்தச் சூழலில் தான் எதிர்ப்பாற்றலுக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநில சுகாதாரத் துறைகளை எச்சரித்துள்ளது. நவம்பர் 1, 2023-க்கு பிறகு இந்தியாவில் ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காரணம், குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்துக்குப் பிறகு இந்தியாவில் ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்கள் போலியான தடுப்பூசியை செலுத்தியிருக்கலாம். அதில் ரேபிஸ் தடுப்புக்கான எந்தத் திறனும் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, நாய் அல்லது பூனை கடித்தால், ரேபிஸ் தடுப்புக்கான முழுப் பாதுகாப்பை அது தராமல் இருக்கக்கூடும்.

மேலும், இந்தியாவில் மற்ற நிறுவனங்களின் ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டாலும், மருந்தின் பெயர் தெரியவில்லை எனில், கூடுதல் பரிசோதனை எடுத்துக்கொள்வது நல்லது என்றும் இந்தியாவிலிருந்து திரும்பிய சுற்றுலாப் பயணிகளை ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

Summary

Australian health authorities have issued an alert after confirming that counterfeit rabies vaccines are circulating in India, advising travellers vaccinated there to seek medical advice and possible revaccination.

Rabies | Rabies Vaccine | Australia | Fake Rabies Vaccine | Counterfeit Rabies Vaccine |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in