
பெங்களூரு ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மனைவி நிகிதா சிங்கானியா கர்நாடக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயது அதுல் சுபாஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த டிசம்பர் 9 அன்று பெங்களூருவிலுள்ள தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு முன் காணொலி வெளியிட்டது மட்டுமில்லாமல் 24 பக்கத்துக்குத் தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதில் தனது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் துன்புறுத்தியதாக அதுல் சுபாஷ் எழுதியுள்ளார். கொலை, பணத்துக்காகத் துன்புறுத்தியது, குடும்ப வன்முறை, வரதட்சணை என நிகிதா சிங்கானியா பல்வேறு பிரிவுகளில் 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக அதுல் சுபாஷ் குற்றம்சாட்டியுள்ளார். மனைவி மட்டுமில்லாமது மனைவியின் உறவினர்களையும் அதுல் சுபாஷ் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார். வழக்கை முடித்துவைக்க நீதிபதியும் ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும் திரும்பப் பெற மனைவி நிகிதா சிங்கானியா ரூ. 3 கோடி கேட்டதாகவும் 4 வயது மகனைக் காண பார்ப்பதற்கான உரிமையாக ரூ. 30 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் நிகிதா சிங்கானியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக அதுல் சுபாஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
அதுல் சுபாஷ் மரணத்தைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல் துறையினர் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தார்கள். மூன்று நாள்களில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நிகிதா சிங்கானியாவுக்கு அழைப்பாணை அனுப்பினார்கள்.
இந்த நிலையில் அதுல் சுபாஷ் மனைவி நிகிதா சிங்கானியா, நிகிதாவின் தாயார் நிஷா சிங்கானியா மற்றும் நிகிதாவின் சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோர் கர்நாடக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நிகிதா சிங்கானியா ஹரியாணாவில் குருகிராமில் கைது செய்யப்பட்டார். நிஷா மற்றும் அனுராக் சிங்கானியா உத்தரப் பிரதேச மாநிலம் அலஹாபாதில் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் மூவரும் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுல் சுபாஷ் தந்தை பவன் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நிறைய ஊழல் நடக்கிறது. ஆனால் உண்மையின் பாதையில் சென்றுகொண்டிருப்பதால், தான் எதிர்த்துப் போராடுவேன் என என் மகன் எப்போதும் கூறுவான். அவன் உள்ளே உடைந்து போயிருந்தான். இருந்தாலும், அவன் யாரிடமும் எதுவும் கூறவில்லை" என்றார் அவர்.