கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதியைப் பெற்று தருவதற்குப் பதில் குற்றவாளியைக் காப்பாற்றும் முயற்சி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"கொல்கத்தாவில் பயிற்சிபெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான மிருகத்தனமான செயல்கள் வெளியாகியுள்ளன. இது மருத்துவர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்குப் பதில் குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாக்கும் முயற்சி நடந்துள்ளது. இது மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது.
மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்லூரியே பாதுகாப்பற்ற இடம் என்ற சூழலை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. அப்படியிருக்க பெற்றோர்கள் எப்படி தங்களுடையப் பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்புவார்கள்?
ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரை, கத்துவா முதல் கொல்கத்தா வரை எனத் தொடர்ந்து அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒவ்வொரு கட்சியும் இதுதொடர்பாக தீவிரமான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும்.
இந்தத் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் துணை நிற்கிறேன். இவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும். இந்தச் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.