பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி!

கால் முறிந்திருந்ததால் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, பொற்கோவில் வாசலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார் சுக்பீர் சிங் பாதல்.
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி!
1 min read

அமிர்தசரஸ் பொற்கோவிலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்துள்ளது.

பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான பஞ்சாப் அரசில், 2009 முதல் 2017 வரை துணை முதல்வராகப் பணியாற்றியுள்ளார் அவரது மகன் சுக்பீர் சிங் பாதல். தந்தைக்குப் பிறகு சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரான சுக்பீர் சிங் பாதல் தலைமையில் கீழ் கடந்த இரு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்களிலும் அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

இதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி குரல் எழுப்பியதை அடுத்து, சமீபத்தில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சுக்பீர் சிங் பாதல். இந்நிலையில், துணை முதல்வர் பதவியில் இருந்தபோது செய்த தவறுகளுக்காக, சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான `அகல் தக்ட்’ சுக்பீர் சிங் பாதலுக்கு தண்டனை விதித்தது.

இந்த தண்டனையின்படி அமிர்தசரஸ் பொற்கோயிலில் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டார் சுக்பீர் சிங் பாதல். கால் முறிந்திருந்ததால் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, இன்று (டிச.4) காலை பொற்கோவில் வாசலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார் சுக்பீர் சிங் பாதல். அப்போது திடீரென ஒரு நபர் அவருக்கு அருகே நெருங்கினார்.

யாரும் எதிர்பாரா வகையில் அந்த நபர் துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங் பாதலுக்குக் குறிவைக்கவே, அருகில் இருந்த பொற்கோவில் பணியாளர்கள் உடனடியாக அந்நபரை மடக்கிப் பிடித்து அவர் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கினர். அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிசெய்த நபர் முன்னாள் தீவிரவாதி நரெய்ன் சிங் சௌரா என்பது தெரியவந்தது. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நரெய்ன் சிங்கிடம் விசாரணை நடந்துவருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in