தில்லி யூனியன் பிரதேசத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி மர்லேனா. அதிஷிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஜாமின் பெற்று திஹார் சிறையில் இருந்து வெளிவந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த செப்.17-ல் தில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகமான ராஜ் நிவாஸில் இன்று புதிய முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார் அதிஷி மர்லேனா.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கோபால் ராய், சௌரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், முகேஷ் அஹ்லவத் ஆகியோர் தில்லி அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதில் முகேஷ் அஹ்லவத் முதல் முறையாக தில்லி அமைச்சராகியுள்ளார்.
பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீக்ஷித் ஆகியோருக்குப் பிறகு தில்லியின் மூன்றாவது பெண் முதல்வராகி உள்ளார் 43 வயதான அதிஷி. 2013-ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அதிஷி, தற்போது கல்காஜி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா தில்லியின் கல்வி அமைச்சராகப் பதவிவகித்தபோது அவருக்கு ஆலோசகராக செயல்பட்ட அதிஷி, தில்லியின் அரசுப் பள்ளிகளை முன்னேற்றுவதில் முக்கியப் பங்காற்றினார்.