தில்லி முதல்வராக அதிஷி செப்டம்பர் 21-ல் பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. இதைத் தொடர்ந்து, திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த அவர், செப்டம்பர் 14 அன்று ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பதவியை இரு நாள்களுக்குப் பிறகு ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
செப்டம்பர் 17 அன்று ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிஷியை முதல்வராகத் தேர்வு செய்ய ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, துணைநிலை ஆளுநரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்த அதிஷி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்த நிலையில், தில்லி முதல்வராக அதிஷி வரும் 21 அன்று பதவியேற்பார் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. மற்ற அமைச்சர்களும் இவருடன் பதவியேற்றுக்கொள்வார்கள் என்றும் ஆம் ஆத்மி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மியின் பலம் 60 ஆக உள்ளது.