தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செப்.17) தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதை அடுத்து, தில்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நடந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தில்லியின் புதிய முதல்வராக, அமைச்சர் அதிஷி மர்லெனா தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோபால் ராய் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள தில்லி யூனியன் பிரதேச சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வரை அதிஷி முதல்வர் பதவியில் இருப்பார் எனவும், கெஜ்ரிவால் விட்டுச் சென்ற பணிகளை முதல்வராக அதிஷி முன்னெடுத்துச் செல்வார் எனவும் கோபால் ராய் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தில்லியின் 3-வது பெண் முதல்வராகப் பதவியேற்க உள்ளார் அதிஷி. முன்பு பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் 1998-ல் 52 நாட்களும், காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஷீலா தீக்ஷித் 2015 வரை தொடர்ந்து 15 வருடங்களும், தில்லியின் முதல்வர்களாகப் பதவி வகித்துள்ளனர்.
43 வயதான அதிஷி தற்போது தில்லி அரசில் கல்வி, பொதுப்பணி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.
கடந்த செப்.15-ல் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதை அடுத்து இன்று மாலை தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவைச் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார் கெஜ்ரிவால்.