கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

கோவா: கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

30 பேர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்கள்.
Published on

கோவா ஷிர்கானில் லைராய் தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கோவாவில் அமைந்துள்ள லைராய் தேவி கோயில் புகழ்பெற்றது. பனாஜியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுக்கக் கோயிலில் கூடி வழிபடுவார்கள்.

மரபுப்படி, நள்ளிரவை அடையும்போது, பக்தர்கள் கோயில் வளாகத்தில் சுற்றி நின்று நடனமாடுவார்கள். பக்தர்கள் கையில் குச்சிகள் இருக்கும். இசைக்கேற்ப, இவற்றைத் தட்டி நடனமாடுவார்கள் எனத் தெரிகிறது. இது முடிந்து தேர்ந்தெடுக்கப்படும் நபர் ஒருவர் கோயில் அருகே குவியலில் நெருப்பைப் பற்றவைப்பார் என்று கூறப்படுகிறது. இது அணைந்தவுடன், பக்தர்கள் வெறுங்காலில் தீக்குண்டத்தில் நடப்பார்கள்.

இந்தப் பண்டிகைக்காகக் கூடியிருந்தபோது, கோயில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 6 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள். 30 பேர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்கள்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் காயமடைந்தவர்களை மருத்துவமனை சென்று நேரில் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி தன்னை அழைத்து நிலைமை குறித்து கேட்டுக்கொண்டதாக பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கடினமான நேரத்தில் முழு உதவியையும் வழங்குவதாக உறுதியையும் பிரதமர் மோடி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாள்களுக்கான அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

logo
Kizhakku News
kizhakkunews.in