தகுந்த நேரத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்: மனோஜ் சின்ஹா

இந்த வரிசையில் அனைத்தும் சரியாக நடைபெறுகின்றன. விரைவில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

`மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது போல, முதலில் தொகுதி மறுசீரமைப்பு, அதன் பிறகு சட்டப்பேரவை பொதுத் தேர்தல், பிறகு தகுந்த நேரத்தில் மாநில அந்தஸ்து’ என்று ஜம்முவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.

ஜம்முவில் செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் சின்ஹா, `கடந்த ஜூன் 20-ல் பிரதமர் மோடி ஸ்ரீ நகருக்கு வந்தபோது விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த ஒரு குழு இங்கு வந்து சம்மந்தப்பட்டவர்களை சந்தித்தது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்கும்.

ஆகஸ்ட் 5-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியது போல, முதலில் தொகுதி மறுசீரமைப்பு, அதன் பிறகு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறும், பிறகு தகுந்த நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். இந்த வரிசையில் அனைத்தும் சரியாக நடைபெறுகின்றன. விரைவில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 74 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகும். 9 தொகுதிகள் எஸ்.டி பிரிவினருக்கும், 7 தொகுதிகள் எஸ்.சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் டிசம்பரில், `30 செப்டம்பர் 2024-க்குள் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2019-ல் ஜம்மு – காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு அங்கே சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவில்லை.

கடைசியாக 2014-ல் மாநில அந்தஸ்தைப் பெற்றிருந்த ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்தன. முஃப்தி முகமது சையீத் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in