
ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும் ஹரியாணாவில் ஒரேகட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
ஹரியாணா, மஹாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். இந்தத் தேர்தல்களுக்கான அட்டவணையை வெளியிட தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இந்த அறிவிப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை மட்டும் தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டார். ஜம்மு-காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுகிறது. பாஜக ஆட்சியிலுள்ள ஹரியாணாவில் அக்டோபர் 1-ல் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர், ஹரியாணா மாநிலங்களில் அக்டோபர் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மஹாராஷ்டிரத்திலும் ஜார்க்கண்டிலும் இதற்குப் பிறகு தேர்தல் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:
"2024 மக்களவைத் தேர்தல் உலக அளவில் மிகப் பெரிய தேர்தல் நடைமுறை. இது வெற்றிகரமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் திருவிழாவை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடியது. இதில் நிறைய சாதனைகளைச் செய்துள்ளோம். முதன்முறையாக உலக அளவில் நிறைய வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளன.
அண்மையில், தேர்தல் பணிகளுக்காக ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றோம். மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் இருந்தன. அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும். விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். மக்களவைத் தேர்தலின்போது ஜம்மு-காஷ்மீரில் வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். மாற்றம் வேண்டும் என்பதை விரும்புவது மட்டுமில்லாமல், மாற்றத்துக்கான குரலாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் 44.46 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள், 42.62 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள். 3.71 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள். 20.7 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள். அமர்நாத் யாத்ரா ஆகஸ்ட் 19-ல் நிறைவடைகிறது. இறுதி வாக்காளர்கள் பட்டியல் ஆகஸ்ட் 20-ல் வெளியிடப்படும்.
ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2.01 கோடி வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் 1.06 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 0.95 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 4.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள். 40.95 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள்.
கடந்த முறை மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தல் இணைந்து நடத்தப்பட்டன. அப்போது, ஜம்மு-காஷ்மீர் ஒரு பிரச்னையாக இல்லை. இந்த ஆண்டு 4 தேர்தல்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து, 5-வது தேர்தலும் உடனடியாக நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, மஹாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளன. பாதுகாப்புப் படைகளைப் பொறுத்து இரு தேர்தல்களை இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மஹாராஷ்டிரத்தில் கடுமையான மழை மற்றும் பல்வேறு பண்டிகைகள் இருப்பதால் இதுவும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது" என்றார் ராஜீவ் குமார்.