கடந்த 87 வருடங்களாக இஸ்லாமிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொழுகை மேற்கொள்வதற்கு ஏதுவாக வெள்ளிக்கிழமை நாட்களில் அஸ்ஸாம் சட்டபேரவையில் வழங்கப்படும் 2 மணி நேர இடைவேளை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை முன்வைத்து, அஸ்ஸாம் சட்டப்பேரவை சபாநாயகர் பிஸ்வஜித் டைமாரிக்கு நன்றி தெரிவித்த அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்த சர்மா, இந்த நடவடிக்கையால் சட்டப்பேரவையின் திறன் மேலும் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் சட்டப்பேரவையின் பழைய விதிகளின்படி, வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டும் இஸ்லாமிய சட்டப்பேரவை உறுப்பினர் தொழுவதற்கு ஏதுவாக காலை 11 மணி தொடங்கி 2 மணி நேரம் சட்டப்பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டு இடைவேளை வழங்கப்படும். இது ஜூம்மா இடைவேளை என்று அழைக்கப்பட்டு வந்தது.
திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி, எந்த ஒரு ஒத்திவைப்பும் இல்லாமல், வெள்ளிக்கிழமை நாட்களில் தொடர்ந்து சட்டப்பேரவை அலுவல்கள் நடைபெறும்.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது அன்றைய அஸ்ஸாம் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த சையத் சதுல்லாவின் முன்னேற்பாட்டால் இந்த 2 மணி நேர இடைவேளை நடைமுறைக்கு வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகும் இந்த நடைமுறையைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தது அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை.
வெள்ளிக்கிழமை நாட்களில் வழங்கப்படும் இந்த 2 மணி நேர இடைவேளையை நிரந்தரமாக ரத்து செய்ய, அஸ்ஸாம் சட்டப்பேரவை சபாநாயகர் பிஸ்வஜித் டைமாரி தலைமையிலான விதிகள் குழு முடிவு செய்தது. பிறகு இந்த முடிவுக்கு அஸ்ஸாம் சட்டப்பேரவை ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.