
ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சர் பூபேந்தர் யாதவ், வனவிலங்கு பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவிலும்கூட அவை குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளன. குஜராத்தின் கிர் காடுகள் மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரே முறை நடைபெறும்.
நடப்பாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தகவல் தெரிவித்துள்ளார். 2020-ல் நடைபெற்ற கணக்கெடுப்பைத் தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளில் 217 சிங்கங்கள் அதிகரித்துள்ளதாகவும், இது சிங்கங்களின் எண்ணிக்கையில் 32% உயர்வு (2020-ல் 674) என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக கடந்த 1936-ல் கிர் காடுகளில் கணக்கெடுப்பு நடைபெற்றது. 16-வது ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு கடந்த மே 10 தொடங்கி 13 வரை, தெற்கு குஜராத்தின் 11 மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதியில் நடைபெற்றது.
நடப்பாண்டில் நேரடியாகப் பார்த்து கணக்கிடும் முறையுடன், முதல்முறையாக சிசிடிவிகள் உபயோகப்படுத்தப்பட்டன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் கலந்துகொண்டார்கள்.
இது தொடர்பாக, தன் எக்ஸ் கணக்கில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, `முதலில் குஜராத் முதல்வராகவும், பின்னர் இந்தியப் பிரதமராகவும், புராஜெக்ட் லயன் (Project Lion) திட்டத்தை முன்னுரிமைப் பணியாக மாற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளால் இந்த அற்புதமான பாதுகாப்பு முயற்சி வெற்றியடைந்துள்ளது’ என்றார்.