
நாடாளுமன்றத்தை நோக்கி இன்று (டிச.2) உத்தர பிரதேச விவசாய அமைப்புகள் பேரணி தொடங்கியதை அடுத்து, தில்லி-உத்தர பிரதேச எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள கௌதம் புத் நகர், ஆக்ரா, அலிகார், புலந்ஷாஹர் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய கூட்டமைப்புகளான பாரதிய கிசான் பரிஷத், கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்த் கிசான் மோர்ச்சா ஆகியவை தங்களின் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணி நடத்தப்போவதாக அறிவித்தன.
இதனைத் தொடர்ந்து விவாசாயிகள் தில்லிக்குள் பேரணி செல்வததைத் தடுக்கும் வகையில், இன்று காலையில் நொய்டா-தில்லி எல்லைப் பகுதியை தடுப்புகள் உபயோகித்து அடைத்தனர் காவல்துறையினர். மேலும் அங்கே மூன்று அடுக்குப் பாதுகாப்பில் சுமார் 4,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் சில விவசாயத் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் விவசாயிகள் தில்லிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், நொய்டாவில் இருந்து பிரேர்னா ஸ்தல் வழியாக தில்லிக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அத்துடன் உ.பி.யின் யமுனா அதிவேக நெடுஞ்சாலை வழியாக நொய்டாவுக்குள் நுழைய கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தில்லி-நொய்டா எல்லைப் பகுதியின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. இதனால் தில்லி எல்லைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காலை முதலே பல கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
நொய்டாவில் இருந்து தில்லிக்குள் நுழைய மெட்ரோ ரயில் சேவையை உபயோகப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.