
தலைநகர் தில்லியில் இன்று (அக்.14) தொடங்கி வரும் 1 ஜனவரி 2025 வரை பட்டாசுகளை விற்க, வாங்க, வெடிக்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது தில்லி அரசு.
1 ஜனவரி 2025 வரை தில்லியில் பட்டாசுகளை விற்க, வாங்க, வெடிக்கத் தடை விதிப்பதாக கடந்த செப்.9-ல் அறிவித்தது தில்லி அரசு. அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், தடை உத்தரவு அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், தில்லி அரசு முன்பு வெளியிட்ட தடை உத்தரவு இன்று (அக்.14) முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார் தில்லி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கோபால் ராய்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கோபால் ராய், `குளிர்கால மாதங்களான பண்டிகை காலங்களில் காற்று மாசு அபாயகரமான அளவிற்கு அதிகரிக்கும். எனவே காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது’ என்றார்.
அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, 1981 காற்று (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தது. ஆன்லைன் வழியாக விற்கப்படும் பட்டாசுகளுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பிறப்பித்துள்ள இந்தத் தடை உத்தரவுக்கு தில்லி மக்கள் தகுந்த ஒத்துழைப்பை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் கோபால் ராய். வரும் அக்.31-ல் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே இந்தத் தடை உத்தரவு அதிகமாகக் கவனம்பெறுகிறது.