திஹார் சிறையில் சரணடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

நாட்டு விடுதலைக்காக பகத் சிங் தூக்கிலிடப்படும்போது, தானும் தூக்குமேடை ஏறத் தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
திஹார் சிறையில் சரணடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

உச்ச நீதிமன்றம் வழங்கிய பிணைக் காலம் நிறைவடைந்ததையடுத்து, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் சரணடைந்தார்.

இவரை ஜூன் 5 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 50-க்கும் மேற்பட்ட நாள்கள் திகார் சிறையிலிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்வதற்காக ஜூன் 1 வரை 21 நாள்களுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த மே 10-ல் உத்தரவிட்டது. மே 10 அன்று மாலை சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவைத் தேர்தலுக்கானப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

உச்ச நீதிமன்றம் அவகாசம் கொடுத்த 21 நாள்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று திஹார் சிறையில் சரணடைகிறார் கெஜ்ரிவால். சிறையில் சரணடைவதற்கு முன்பு மகாத்மா காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார். இதன்பிறகு, அனுமர் கோயிலில் வழிபட்டார். ஆம் ஆத்மி அலுவலகத்துக்குச் சென்ற கெஜ்ரிவால் தொண்டர்களைச் சந்தித்து திஹார் சிறைக்குப் புறப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தில்லி திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார். சிறையிலிருந்தபடி காணொளி வாயிலாக தில்லி சிறப்பு நீதிமன்றம் முன்பு கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு அமலாக்கத் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பணியிலிருந்த நீதிபதி சஞ்சீவ் அகர்வால் இந்த மனுவை விசாரித்தார். இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனு நிலுவையில் இருப்பதால், ஜூன் 5 வரை கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால் உத்தரவிட்டார்.

இதனிடையே உரையாற்றிய கெஜ்ரிவால் கூறியதாவது:

"தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றம் எனக்கு 21 நாள்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் திஹார் சிறைக்குச் செல்கிறேன். இந்த 21 நாள்களில் ஒரு நிமிடத்தைக்கூட நான் வீணடிக்கவில்லை. ஆம் ஆத்மிக்கு மட்டும் நான் வாக்கு சேகரிக்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளுக்காகவும் நான் பிரசாரம் மேற்கொண்டேன். மும்பை, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் சென்றேன். நமக்கு ஆம் ஆத்மி முக்கியமல்ல, நாடுதான் முக்கியம்.

ஊழல் செய்ததற்காக நான் சிறை செல்லவில்லை. சர்வாதிகாரத்தை எதிர்த்துக் குரல் எழுப்பியதற்காக நான் சிறை செல்கிறேன். பிரதமர் மோடியே இதை நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்டார். எனக்கு எதிராக அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை.

கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை, எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என நேர்காணல் ஒன்றில் பிரதமர் தெரிவித்தார். ஆனால், அவர் அனுபவமிக்க ஒரு திருடன் என்று குறிப்பிட்டுள்ளார். வாதத்துக்கு நான் அனுபவமிக்க ஒரு திருடன் என்றே வைத்துக்கொள்வோம். எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை, எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றால், ஆதாரமில்லாமல் என்னைச் சிறைக்கு அனுப்புவீர்களா? போலி வழக்கில் என்னைச் சிறையிலடைக்க முடியும் என்கிற செய்தியை அவர் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். அப்படியென்றால், யாரை வேண்டுமானாலும் கைது செய்து, சிறையிலடைப்பேன் என்பதுதான் உங்களுடைய நிலைப்பாடா?

நான் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடி வருகிறேன். இதுபோன்ற சர்வாதிகாரத்தை நாடு சகித்துக்கொள்ளாது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின. எழுதிவைத்துக்கொள்ளுங்கள், இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. ஒரு கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் இருப்பதே வெறும் 25 இடங்கள்தான். வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக தேர்தலுக்குப் பிந்தைய போலி கருத்துக் கணிப்பை எதற்காக வெளியிட வேண்டும் என்பதுதான் பிரச்னையே. இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முயல்கிறார்கள்.

அதிகாரம் சர்வாதிகாரமாக மாறினால், சிறைவாசமும் ஒரு பொறுப்பு என பகத் சிங் கூறியிருக்கிறார். நாட்டு விடுதலைக்காக அவர் தூக்கிலிடப்பட்டார். இந்த முறை நான் சிறைக்குச் செல்கிறேன். எப்போது சிறையிலிருந்து வெளியே வருவேன் எனத் தெரியாது. பகத் சிங் தூக்கிலிடப்படும்போது, நான் தூக்குமேடை ஏறத் தயார்" என்றார் கெஜ்ரிவால்.

தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றம் ஜூன் 5-ல் தீர்ப்பளிக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in