
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மத்திய அரசுக்கு 7 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ல் வாக்குப்பதிவும், பிப்ரவரி 8-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தில்லி தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். இது தொடர்பாக காணொளி வாயிலாக கெஜ்ரிவால் பேசியதாவது,
`இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் வரிச்சுமையால் நசுக்கப்படுகிறார்கள். வரி பயங்கரவாதத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக வரி செலுத்தி, குறைவாக திரும்பப் பெறுகின்றனர். இந்தக் குழுவினர் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கைகளிலும் இல்லை. பிற அரசியல் கட்சிகள் இவர்களை அரசாங்கத்திற்கான ஏ.டி.எம்.களாகப் பயன்படுத்துகின்றார்கள்.
முதியோர்களுக்கான சிறந்த மருத்துவத்தை முற்றிலும் இலவசமாக வழங்கும் வகையில் `சஞ்சீவினி திட்டம்’ போன்ற பல திட்டங்களை ஆம் ஆத்மி அரசு முன்னெடுத்துள்ளது. வரி செலுத்துவோரின் வரிப்பணம், அவர்களின் நலன்களுக்காக செலவு செய்யப்படவேண்டும். இதனை இலவசங்கள் என நிராகரிப்பது தவறு’ என்றார்.
நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற, மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி அரசு முன்வைத்த 7 கோரிக்கைகள் பின்வருமாறு,
1) கல்விக்கான பட்ஜெட்டை 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி, தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண முறையை ஒழுங்குபடுத்தவேண்டும்.
2) உயர்கல்விக்காக மானியங்களை அறிமுகப்படுத்தி, உயர்கல்வியை நடுத்தரவர்க்கத்தினர் அணுகக்கூடிய அளவில் மாற்றவேண்டும்.
3) சுகாதாரத்திற்கான பட்ஜெட்டை 10 சதவீதமாக உயர்த்தி, மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்கவேண்டும்.
4) வருமானவரி உச்ச வரம்பை ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.
5) அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்
6) மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும்.
7) ரயில்வே பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை வழங்கவேண்டும்.