
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகலாம் என்ற தகவல் குறித்து ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் தெரிவித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முதல்வரும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. பஞ்சாபில் மேற்கு லூதியானா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா ஆம் ஆத்மியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சஞ்சீவ் அரோரா இடத்தில் ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்குத் தேர்வாகலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியதாவது:
"அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்குச் செல்லப்போதவில்லை. முன்பு, அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வராகப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு தகவல்களுக்குமே தவறானது. அவர் ஒரு தொகுதிக்குள் மட்டும் அடங்கக்கூடியவரல்ல" என்று அவர் விளக்கமளித்தார்.