இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை: ஆம் ஆத்மி | INDI Alliance

பிஹார் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடப்போகிறோம்.
சஞ்சய் சிங், கெஜ்ரிவால் - கோப்புப்படம்
சஞ்சய் சிங், கெஜ்ரிவால் - கோப்புப்படம்
1 min read

இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் இன்று (ஜூலை 18) தகவல் தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி தற்போது அங்கம் வகிக்கவில்லை என்றும், ஜூலை 21 அன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் ஆம் ஆத்மி பங்கேற்காது என்றும் சஞ்சய் சிங் இன்று (ஜூலை 18) தகவல் தெரிவித்தார்.

குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து வந்த அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டுள்ளதாகவும் சஞ்சய் சிங் கூறினார்.

ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சஞ்சய் சிங் கூறியதாவது,

`ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இண்டியா கூட்டணி (2024) மக்களவைத் தேர்தலுக்கானது. தில்லி மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களில் நாங்கள் தனியாகப் போட்டியிட்டோம். பிஹார் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடப்போகிறோம். பஞ்சாப் மற்றும் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் நாங்கள் தனியாகப் போட்டியிட்டோம். ஆம் ஆத்மி கட்சி இண்டியாவின் அங்கம் அல்ல’ என்றார்.

மேலும், `நாடாளுமன்றப் பிரச்னைகளில், நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவோம். அவர்களும் எங்களின் ஆதரவைப் பெறுகிறார்கள். நாங்கள் எப்போதும் வலுவான மற்றும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியின் பங்களிப்பை மேற்கொண்டிருந்தோம், அதை தொடர்ந்து செய்வோம்’ என்றார்.

ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் கீழ் தில்லியில் உள்ள 7 தொகுதிகளில் இணைந்து போட்டியிட்டன. இருப்பினும், ஹரியாணா மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in