அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம்

ஜூன் 2 அன்று கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்
1 min read

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, மனு மீது ஏப்ரல் 24-க்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது.

இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தஅர். அதில், “அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத் துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது” என குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இது தேர்தல் நேரம் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூன் 2 அன்று கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமை செயலகத்திற்கு செல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தில்லியை பொறுத்தவரை பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன. இதில், ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தில்லியில் மே 25 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in