முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்: அரவிந்த் கெஜ்ரிவால்
தில்லி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்று கடந்த செப்.13-ல் திஹார் சிறையில் இருந்து வெளிவந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அதைத் தொடர்ந்து இன்று (செப்.15) தில்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடையே கெஜ்ரிவால் பேசியவை பின்வருமாறு:
`சிறையில் இருந்து வெளியேறியதும் அக்னிப் பரிட்சையை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். டெல்லி முதல்வர் பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலகுகிறேன். இரு நாட்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நடத்தி வேறு ஒரு புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
வரும் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை நவம்பர் மாதத்தில் நடத்த நான் கோரிக்கைவிடுக்கிறேன். ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளேன். மக்கள் எங்களை நேர்மையானவர்கள் என்று தீர்ப்பளிக்கும் வரை நானும், மணீஷ் சிசோடியாவும் எந்தப் பதவியிலும் அமர மாட்டோம்.
சிறையில் இருந்தபோது பகத் சிங்கின் டயரியைப் படித்தேன். பிரிட்டிஷ் காலனி ஆட்சியைவிட தற்போதைய மத்திய அரசின் ஆட்சி சர்வாதிகாரப்போக்குடன் உள்ளது. ஆம் ஆத்மியின் ஆட்சியைக் கீழ் இறக்க பாஜக விரும்பியது. என்னை சிறைக்கு அனுப்பியதும், எங்கள் கட்சியை உடைத்து தில்லியில் ஆட்சியை அமைக்க அவர்கள் விரும்பினார்கள்.
ஆனால் எங்கள் கட்சி உடையவில்லை. சிறையில் இருந்தபோது முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. ஏனென்றால் நான் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க விரும்பினேன். நேர்மையான முறையில் மக்களுக்காக எங்கள் கட்சி உழைத்தது. தில்லியின் சுகாதாரக் கட்டமைப்பை எங்கள் அரசு மேம்படுத்தியது' என்றார்.