
`தவறான வாதங்களை ஊக்குவித்ததற்காகவும், பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தியதற்காகவும்’ மௌலானா மௌடாடி, அருந்ததி ராய், ஏ.ஜி. நூரானி, விக்டோரியா ஸ்கோஃபீல்ட் மற்றும் டேவிட் தேவதாஸ் போன்ற பிரபல எழுத்தாளர்களின் 25 புத்தகங்களை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு தடை செய்துள்ளது.
`ஜம்மு-காஷ்மீரில் சில இலக்கியங்கள் தவறான வாதங்களையும் பிரிவினைவாதத்தையும் பரப்புகின்றன என்பது அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது’ என்று கடந்த செவ்வாய்கிழமை (ஆக. 5) அன்று அம்மாநில உள்துறை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`வரலாற்று உண்மைகளைத் திரித்தல், பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துதல், பாதுகாப்புப் படையினரை இழிவுபடுத்துதல், மத தீவிரமயமாக்கல், அந்நியப்படுத்தல், வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கான பாதையை ஊக்கப்படுத்துதல் போன்ற வழிகளில் ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்களை தீவிரமயமாக்குவதற்கு இந்த இலக்கியங்கள் பங்களித்துள்ளன’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
`பிரிவினைவாதத்தைத் தூண்டி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து விளைவுக்கும் வகையில்’, பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவுகள் 152, 196 & 197-ன் கீழ் விதிகளை ஈர்க்கும் 25 புத்தகங்கள் அந்த உத்தரவில் பட்டியலிட்டுள்ளன.
இந்த 25 புத்தகங்களின் வெளியீடு மற்றும் அவற்றின் பிரதிகள் அல்லது பிற ஆவணங்கள் `பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 பிரிவு 98-ன் `பறிமுதல்’ செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவேண்டும் என்று உத்தரவின் மூலம் ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலில் அரசியல் விமர்சன, வரலாற்று ரீதியிலான புத்தகங்களும் அடங்கும்.
பிரபல அரசியலமைப்பு நிபுணர் ஏஜி நூரானியின் `தி காஷ்மீர் டிஸ்ப்யூட் 1947-2012’, சுமந்திரா போஸின் `காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ் அண்ட் கன்டெஸ்டட் லேண்ட்ஸ்’, டேவிட் தேவதாஸின் `இன் சர்ச் ஆஃப் எ ஃபியூச்சர்: தி காஷ்மீர் ஸ்டோரி’, பத்திரிகையாளர் அனுராதா பாசின் எழுதிய `ராயின் ஆஸாதி’ மற்றும் `எ டிஸ்மாண்டில்ட் ஸ்டேட்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர் ஆஃப் ஆர்டிகிள் 370’ போன்ற புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.