
கேரளத்தின் சைரோ-மலபார் தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள், மத மாற்றம் மற்றும் ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக இந்த வாரத்தின் தொடக்கத்தில் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது.
சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் வைத்து பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இரு கன்னியாஸ்திரிகளுடன், சுகமான் மண்டவி என்று அடையாளம் காணப்படும் ஒரு நபர் என மூன்று பேர், நேற்று (ஜூலை 29) அரசு ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, மூன்று பெண்களை அவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்திலிருந்து கடத்தியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த மூன்று பெண்களின் குடும்பத்தினரும் அவர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவலை மறுத்துள்ளனர்.
கன்னியாஸ்திரிகள் இருவரும் ஆலப்புழாவில் உள்ள சேர்த்தலாவை தலைமையிடமாகக் கொண்ட அசிசி சகோதரிகள் மேரி இம்மாகுலேட் (பசுமைத் தோட்டங்கள்) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
அசிசி சகோதரிகள் மேரி இம்மாகுலேட் சபையின் மத்தியப் பிரதேச மாகாண ஜெனரல் நித்யா பிரான்சிஸ், இதற்கு முன்பு இத்தகைய சூழலை சபை எதிர்கொண்டதில்லை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
`மூன்று பெண்களும் ஆக்ராவில் உள்ள ஒரு கான்வென்ட்டில் வேலை செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்தனர், அவர்களை வரவேற்க கன்னியாஸ்திரிகள் துர்க் ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தனர்’ என்று நித்யா பிரான்சிஸ் கூறினார்.
கன்னியாஸ்திரிகள் தரப்பு வழக்கறிஞர் டமஸ்கர் டாண்டன், `கைது நடவடிக்கை முதற்கட்ட விசாரணை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
`(சத்தீஸ்கரின்) துர்க்கில் உள்ள அரசு ரயில்வே காவல்துறை (GRP) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அந்த மூன்று பெண்களும் பெரியவர்கள், மேலும் அவர்கள் பணிக்குச் செல்வதற்கு அவர்களது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்’ என்று டாண்டன் கூறினார், மேலும் `அழுத்தத்தின் பெயரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்று அவர் குற்றம்சாட்டினார்.
கன்னியாஸ்திரிகளின் கைது நடவடிக்கை சத்தீஸ்கரில் மட்டுமல்லாமல், கேரளம் மற்றும் தில்லியிலும் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்.) மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்.) ஆகியவற்றின் எம்.பி.க்கள் நேற்று (ஜூலை 30) நாடாளுமன்றத்திற்கு வெளியே தனித்தனியாக போராட்டங்களை நடத்தினார்கள்.