
அமெரிக்காவில் கௌதம் அதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:
"இந்திய மற்றும் அமெரிக்க சட்டங்களை கௌதம் அதானி மீறியுள்ளது தற்போது தெளிவாகிவிட்டது. அமெரிக்காவில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் அவர் எப்படி சுதந்திரமாக வலம் வருகிறார் என்பது புதிராக உள்ளது. முதல்வர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ரூ. 2,000 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார். இது தவிர வேறு ஊழல்களிலும் அவர் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், தண்டனையின்றி சுதந்திரமாக இருக்கிறார். இதை நாங்கள் திரும்பத் திரும்ப எழுப்புகிறோம். நாங்கள் கூறி வருவதற்கான சாட்சிதான் இது. அதானியைப் பிரதமர் பாதுகாக்கிறார். அதானியுடன் இணைந்து பிரதமர் ஊழலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளோம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இந்த விவகாரத்தை எழுப்புவது எனது கடமை. பிரதமர் மோடி இவரை 100 சதவீதம் பாதுகாக்கிறார். ஊழல் மூலம் இந்தியச் சொத்துகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை என்பது எங்களுடையக் கோரிக்கை. ஆனால், அதானி கைது செய்யப்பட வேண்டும். ஆனால், அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். காரணம், இந்தியப் பிரதமர் அவரைப் பாதுகாக்கிறார். அதானியின் பாதுகாவலர் தான் பிரதமர்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை என்பது முக்கியம். ஆனால், அதானி ஏன் சிறையில்லை என்பதுதான் தற்போதையக் கேள்வி. இந்தியாவில் அதானி குற்றம் புரிந்துள்ளதாகவும், லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் அமெரிக்க ஏஜென்சி கூறியுள்ளது. பிரதமர் எதையும் செய்யாமல் இருக்கிறார். அவரால் எதுவும் செய்ய முடியாது. பிரதமர் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தாலும், அவரால் செய்ய முடியாது. காரணம், அவர் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளார். அதானி ரூ. 2 ஆயிரம் கோடி ஊழலைச் செய்துள்ளார். பிரதமருடன் தொடர்பிலிருப்பதால், அதானி கைது செய்யப்பட மாட்டார், விசாரணையை எதிர்கொள்ள மாட்டார் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.
எங்கு ஊழல் நடந்தாலும் அங்கு விசாரணை நடைபெற வேண்டும். ஆனால், விசாரணை அதானியிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். அவர் கைது செய்யப்படாத வரை, விசாரணை நம்பத்தகுந்ததாக இருக்கும். எனவே, அவரிடமிருந்துதான் விசாரணையைத் தொடங்க வேண்டும். அதானியைக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். இதன்பிறகு, யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ, அவர்களையும் கைது செய்ய வேண்டும். இறுதியில் நரேந்திர மோடியின் பெயரும் வெளியில் வரும். காரணம், பாஜகவின் ஒட்டுமொத்த நிதி அமைப்பும் அதானியின் கையில்தான் உள்ளது. எனவே, பிரதமரே விரும்பினாலும், அவரால் எதுவும் செய்ய முடியாது" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சூரிய மின்சக்தித் திட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கௌதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.