
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியா மற்றும் ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் மீது காங்கிரஸ் நிர்வாகி அளித்த புகாரின்பேரில் பெங்களூரு மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கிளை அலுவலகம் துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் இருப்பதாகத் தவறான தகவலை போலியாகப் பரப்பியதாக அவர்கள் இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. `எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு பரப்பும் வகையில் அவர்கள் செயல்பட்டதாக’ காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இளைஞர் காங்கிரஸின் சட்டப்பிரிவு வழங்கிய புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளன முதல் தகவல் அறிக்கையில், `இந்த திட்டமிட்ட பிரச்சாரம் நெறிமுறை தவறல் என்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும், தேசத்தை சீர்குலைப்பதற்கும், வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுத்தப்படுத்த குற்றச்சதியாகும்.
குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் தங்கள் செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்து உண்மை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேச நலன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரிபப்ளிக் டிவி, வீடியோ எடிட்டர் ஒருவரால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால், காங்கிரஸ் கட்சியின் துருக்கி அலுவலகம் என்று தவறான புகைப்படம் காண்பிக்கப்பட்டதாகவும், அந்த புகைப்படத்திற்கும், சம்மந்தப்பட்ட காணொளிக்கும் தொடர்பு இல்லை என்றும், தவறுக்காக வருந்துவதாகவும் கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டபோது, அந்நாட்டிற்கு ஆதரவாக பல்வேறு உதவிகளை துருக்கி வழங்கியது.
இதனால் துருக்கிக்கு எதிரான மனநிலை தற்போது இந்தியாவில் நிலவுகிறது. அந்நாட்டிற்குச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பயண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக சில இந்திய பல்கலைக்கழகங்கள் அறிவித்தன.