வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு

எந்த ஒரு முன் அனுமதியும் இன்றி சோதனை நடத்தவும், யாரையும் கைது செய்யவும் பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு
ANI
1 min read

மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஒரு இடத்தில் (காவல் நிலைய பகுதி அல்லது மாவட்டம் அல்லது மாநிலம்) அமல்படுத்தப்பட்டால், அது பாதிக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு, அங்கே எந்த ஒரு முன் அனுமதியும் இன்றி சோதனை நடத்தவும், யாரையும் கைது செய்யவும், கூடுதல் பிரிவுகளை பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தவும் பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படும்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 13 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அம்மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், ஏப்ரல் 1 தொடங்கி அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 30) வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் திராப், சங்லாங், லாங்டிங் மாவட்டங்கள், அதோடு அஸ்ஸாம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நம்சாய் மாவட்டத்தில் உள்ள மூன்று காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தனி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதோடு, மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தைப் பொருத்தவரையில், எட்டு மாவட்டங்களில் முழுவதாகவும், ஐந்து மாவட்டங்களில் உள்ள 21 காவல் நிலையப் பகுதிகளிலும், அடுத்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in