மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மனுத்தாக்கல்

முன்னதாக, கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க முடியாது எனக் கூறி உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு நீதிபதிகள் அமர்வு நிராகரித்திருந்தது.
கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 அன்று முடிவடையவுள்ள நிலையில், அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் நேரத்தை முன்னிட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2 அன்று கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 25 அன்று தில்லியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.

ஜூன் 1 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடையவுள்ள நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாள்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க முடியாது எனக் கூறி உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு நீதிபதிகள் அமர்வு நிராகரித்தது. மேலும், இது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்யவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதனை அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு எடுக்க பரிந்துரைப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in