ஜாமீன் நீட்டிப்பு கோரி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜூன் 2 அன்று கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 அன்று முடிவடையவுள்ள நிலையில், அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் நேரத்தை முன்னிட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2 அன்று கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 25 அன்று தில்லியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

ஜூன் 1 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடையவுள்ள நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாள்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in