கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தனது கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, மனு மீது ஏப்ரல் 24-க்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது.
இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தஅர். அதில், “அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத் துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது” என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் இது தேர்தல் நேரம் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மே 7-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.