தவறான செயல் வேதனையான விளைவை ஏற்படுத்தும்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை | Asim Munir | Pakistan

தங்களுடைய சொந்த தோல்விகளை மறைக்க இந்தியாவுக்கு எதிரான சொல்லாடலை மீண்டும் மீண்டும் வெளியிடுவது நன்கு அறியப்பட்ட ஒரு வழிமுறையாகும்.
ரந்தீர் ஜெய்ஸ்வால் - கோப்புப்படம்
ரந்தீர் ஜெய்ஸ்வால் - கோப்புப்படம்ANI
1 min read

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அண்மையில் விடுத்த அச்சுறுத்தல்களுக்கு இந்தியா இன்று (ஆக. 14) பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக, தனது உள்நாட்டு தோல்விகளில் இருந்து திசைதிருப்ப இந்தியாவுக்கு எதிரான சொல்லாடல்களை பாகிஸ்தான் பயன்படுத்துவதாக இந்தியா குற்றம்சாட்டியது.

`இந்தியாவுக்கு எதிராக பொறுப்பற்ற, போர் வெறிகொண்ட மற்றும் வெறுப்பு கருத்துக்களை தொடர்ந்து பாகிஸ்தான் தலைமை பரப்புவது பற்றிய கூற்றுகளை நாங்கள் கண்டிக்கிறோம். தங்களுடைய சொந்த தோல்விகளை மறைக்க இந்தியாவுக்கு எதிரான சொல்லாடலை மீண்டும் மீண்டும் வெளியிடுவது நன்கு அறியப்பட்ட ஒரு வழிமுறையாகும்,’ என இன்று (ஆக. 14) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

மேலும், `எந்தவொரு தவறான செயலும் வேதனையான விளைவுகளை ஏற்படுத்தும், சமீபத்தில் நிரூபிக்கப்பட்டதைப்போல..’ என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்தியா பதிலளித்த ராணுவ மோதலை ரன்தீர் ஜெய்ஸ்வால் மறைமுகமாக குறிப்பிட்டார்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முனீர் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஆதரித்த பின்னர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இத்தகைய கருத்துகளை கூறியுள்ளார்.

`இந்தியாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டால் உலகின் பாதியை பாகிஸ்தான் அழித்துவிடும்’ என்று அமெரிக்காவில் வைத்து அசிம் முனீர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்களை உடனடியாக கண்டித்த மத்திய அரசு, அவை மிகவும் பொறுப்பற்றவை என்றும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பவை என்றும் கூறியது.

மேலும், அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்வின்போது, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறிவைக்கப்படும் என்று முனீர் மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in