
ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்று வரும் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அம்மாநிலத்திற்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒரு நாளுக்கான அதிகபட்ச வேலை நேரத்தை 9 மணிநேரத்திலிருந்து 10 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
தொழிலாளர் சட்டங்களை திருத்த ஆந்திர அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அம்மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பார்த்தசாரதி கூறியதாவது,
`ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேரம் வேலை செய்ய அனுமதிக்கும் பிரிவு 54-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அதிகபட்ச வேலை நேரம் 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிவு 55-ன் கீழ் ஐந்து மணிநேர வேலை நேரத்திற்கு, ஒரு மணிநேரம் ஓய்வு இருந்தது. தற்போது அது ஆறு மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது’ என்றார்.
தொழிலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் `சாதகமான வகையில்’ தொழிலாளர் சட்டங்களை திருத்த இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாநிலத்தில் முதலீடுகள் பெருகும் என்றும் அமைச்சர் பார்த்தசாரதி விளக்கமளித்தார்.
முன்னதாக, கூடுதல் வேலை நேரம் (overtime) 75 மணிநேரங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது, இப்போது அது ஒரு காலாண்டிற்கு 144 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இரவு நேரப் பணிகளில் பெண்கள் அதிகமாகப் பணியாற்றுவதற்கு ஏதுவாக, இரவு நேரப் பணி விதிகளை அமைச்சரவை தளர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆந்திர மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. ராமகிருஷ்ணா, `மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் தொழிலாளர் விரோத கொள்கைகளை பின்பற்றுவதாக’ பிடிஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விதிகளை எதிர்க்கும் வகையில், ஜூலை 9-ம் தேதி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார்.