திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் விமர்சனத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமானதிலிருந்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசத் தொடங்கினார். நாடு முழுக்க சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் ஒன்றைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இவருடையப் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில், "அன்புள்ள பவன் கல்யாண். இந்தச் சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கக்கூடிய மாநிலத்தில் நடந்துள்ளது. விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குங்கள். இதற்குப் பதிலாக ஏன் அச்சத்தை உண்டாக்கி இதை தேசிய அளவில் பெரிதுபடுத்துகிறீர்கள்? நாட்டில் ஏற்கெனவே போதுமான அளவுக்கு வகுப்புவாதப் பதற்றங்கள் உள்ளன" என்று நடிகர் பிரகாஷ் பதிலளித்திருந்தார்.
இதனிடையே, புனிதத்தன்மையைக் காப்பதற்காக 11 நாள்கள் விரதம் இருக்கப்போவதாக பவன் கல்யாண் அறிவித்தார். இதன்பகுதியாக விஜயவாடாவிலுள்ள கனக துர்கா கோயிலுக்கு அவர் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பிரகாஷ் குறித்து விமர்சித்திருந்தார்.
"நான் ஹிந்து மதத்தின் புனிதத் தன்மை மற்றும் உணவுக் கலப்படம் குறித்து பேசுகிறேன். இந்த விவகாரங்கள் குறித்து நான் பேசக் கூடாதா? உங்களை (பிரகாஷ் ராஜ்) மதிக்கிறேன். ஆனால், மதச்சார்பின்மை என்று வந்துவிட்டால், அது கட்டாயம் பரஸ்பரம் இருக்க வேண்டும். நீங்கள் ஏன் என்னை விமர்சிக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. சனாதன தர்மம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நான் பேசக் கூடாதா? பிரகாஷ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். திரைத் துறையினரும் மற்றவர்களும் இதை சாதாரணமாகக் கையாளக் கூடாது. சனாதன தர்மத்தில் நான் மிகத் தீவிரமாக இருப்பவன். ஐயப்பன் மற்றும் சரஸ்வதியை நிறைய விமர்சகர்கள் குறிவைத்துள்ளார்கள்.
சனாதன தர்மம் என்பது அதிமுக்கியமானது. ஒவ்வொரு ஹிந்துவும் இதில் பொறுப்பேற்க வேண்டும். மற்ற மதங்களில் இதுபோன்ற பிரச்னைகள் எழுந்திருந்தால், பரவலாகப் போராட்டங்கள் நடந்திருக்கும்" என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளப் பக்கத்தில் காணொளி வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.
"அன்புள்ள பவன் கல்யாண். உங்களுடைச் செய்தியாளர் சந்திப்பை நான் பார்த்தேன். நான் கூறியதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. நான் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் உள்ளேன். உங்களுடையக் கேள்விகளுக்கு விரைவில் பதிலளிக்கிறேன். இதனிடையே, என்னுடைய முந்தையப் எக்ஸ் தளப் பதிவுகளைப் பார்த்து அதை நீங்கள் புரிந்துகொண்டால் நான் வரவேற்பேன்" என்று பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.