சனாதன தர்மத்தைப் பாதுகாக்க புதிய அணி தொடங்கப்படுவதாக, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஜன சேனா கட்சித் தலைவராகப் பதவி வகிக்கிறார். இந்நிலையில், சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் வகையில், தன் ஜன சேனா கட்சியில் `நரசிம்ம வராஹி படை’ என பிரத்யேகமான ஒரு புதிய அணியை உருவாக்குவதாக அறிவித்துள்ளார் பவன் கல்யாண்.
ஆந்திர மாநிலம் ஜகந்நாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில், இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் தீபம்-2 திட்டத்தை கடந்த நவ.1-ல் தொடங்கி வைத்தார் பவன் கல்யாண். அந்த விழாவில் பவன் கல்யாண் பேசியவை பின்வருமாறு,
`அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன், ஆனால் என் நம்பிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். சனாதன தர்மத்தை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் அல்லது சனாதன தர்மத்தை பொதுவெளியில் அவமதிக்கும் வகையில் பேசுபவர்கள் அதற்கான விளைவை சந்திக்கவேண்டும். எனவே, சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் வகையில் எங்கள் கட்சிக்குள் `நரசிம்ம வராஹி படை’ என பிரத்யேகமான ஒரு அணியை உருவாக்குகிறேன்’ என்றார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின்போது, திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு தேசிய அளவில் கவனம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, சனாதன தர்மத்தைப் பாதுகாக்க தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட்டு, அதன் நம்பிக்கையை அவமதிக்கும் செயல்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கடந்த மாதம் திருப்பதியில் பேசினார் பவன் கல்யாண்.