
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமாக இடங்களில் பாஜக முன்னிலை பெற்று, 25 ஆண்டுகளுக்கு பிறகு தில்லியில் ஆட்சியமைக்கவுள்ளது.
கடந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்த ஒரு பார்வை:
1998-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக தில்லியின் முதல்வரானார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீக்சித். இதைத் தொடர்ந்து 2003 மற்றும் 2008 என அடுத்தடுத்து இரு தேர்தல்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்று முறை தில்லி முதல்வராகி சாதனை படைத்தார் ஷீலா தீக்சித்.
இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, 2013-ல் தில்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது.
இதில் தனிப்பெரும் கட்சியாக 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 2-வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், 3-வது இடத்தில் காங்கிரஸுக்கு 8 இடங்களும் கிடைத்தன.
இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க விதமாக, புது தில்லி தொகுதியில் முதல்வர் ஷீலா தீக்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஜன் லாக்பால் அமைக்கக்கோரி, மத்திய காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்களுக்கு எதிரான போராட்டங்களை 2011-ல் முன்னெடுத்தார் அண்ணா ஹஸாரே.
அவருடன் கைகோர்த்த அரவிந்த் கெஜ்ரிவால் 2012-ல் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரானார். ஆனால் 2013 தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தில்லியில் ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல் முறையாக தில்லி முதல்வராகப் பொறுப்பேற்றார் கெஜ்ரிவால்.
ஆனால் ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் சட்டத்தை தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதவளிக்காததால் 49 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். இதைத் தொடர்ந்து, தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.
அதேநேரம் 2014 மக்களவைத் தேர்தலுடன் தில்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவில்லை. ஓராண்டு கழித்து 7 பிப்ரவரி 2015-ல் தில்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என இத்தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவியது.
மேலும், முன்பு ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கைகோர்த்திருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி இந்த தேர்தலில் பாஜகவின் முதல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
பிப்.7 தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.10-ல் எண்ணப்பட்டன. 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது ஆம் ஆத்மி கட்சி. பாஜகவுக்கு 3 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதிலும், கிருஷ்ணா நகர் தொகுதியில் 2,277 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார் கிரண் பேடி.
மேலும், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. முதல்முறையாக தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மோசமான சாதனையைப் படைத்தது காங்கிரஸ் கட்சி. 14 பிப்ரவரி 2015-ல் தில்லி முதல்வராகப் பதவியேற்ற கெஜ்ரிவால், 5 வருட ஆட்சியை 2020-ல் நிறைவு செய்தார்.
இதனையடுத்து 8 பிப்ரவரி 2020-ல் மீண்டும் தில்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 62 இடங்களில் வெற்றி பெற்றது ஆம் ஆத்மி. 8 இடங்கள் பாஜகவுக்குக் கிடைத்தன. ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை. மீண்டும் தில்லி முதல்வராகப் பதவியேற்றார் கெஜ்ரிவால்.
ஆனால் தில்லி அரசு நடைமுறைப்படுத்திய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கூறி, கடந்தாண்டு மார்ச் 21-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற இந்த கைது அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்டு திஹார் சிறையில் இருந்து 13 செப்டம்பரில் வெளியே வந்தார் கெஜ்ரிவால். இதைத் தொடர்ந்து 17 செப்டம்பரில் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, தில்லியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றார் ஆதிஷி.
இந்நிலையில், கடந்த பிப்.5-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (பிப்.8) எண்ணப்படும் நிலையில், ஆரம்பம் முதலே தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது பாஜக.
இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் 10 வருட கால ஆட்சி தில்லியில் முடிவுக்கு வருகிறது.