மணிப்பூர்: அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் இன்று ஆலோசனை

மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்து அந்த மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கியுள்ளார்.
மணிப்பூர்: அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் இன்று ஆலோசனை
1 min read

மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் இன்று கூடுகிறது.

மணிப்பூரில் மெய்தேய் சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கக் கோரி கோரிக்கை எழுப்பினார்கள். அகில இந்திய பழங்குடியினர் மாணவர்கள் சங்கம் இதை எதிர்த்து பேரணி மேற்கொண்டார்கள். இந்தப் பேரணியில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே 3 முதல் மணிப்பூர் வன்முறையைச் சந்தித்து வருகிறது. இரு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டது, நாட்டையே உலுக்கி தலைகுனியச் செய்தது. பிரதமர் மோடி அங்கு செல்லாமல் இருப்பது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்தச் சூழலில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினரின் பல்வேறு வீடுகள் தீயிடப்பட்டன. ஜிரிபம் பகுதியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து ஏறத்தாழ 600 பேர் அசாம் மாநிலம் கசார் மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளார்கள். கசார் மாவட்ட காவல் துறையினர் எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளார்கள்.

மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்து அந்த மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, மணிப்பூர் குறித்து ஆலோசிக்க உயர்நிலைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமித் ஷா தலைமையிலான இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா, உளவுத் துறை இயக்குநர், மணிப்பூர் தலைமைச் செயலர், மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், பாதுகாப்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in