100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்: அமித்ஷா
பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் நாட்டில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
3-வது முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவு பெறுவதை ஒட்டி இன்று (செப்.17) தலைநகர் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார் அமைச்சர் அமித் ஷா. செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியவை பின்வருமாறு:
`கடந்த 10 வருடங்களாக ஏழை மக்களின் வளர்ச்சி, பாதுகாப்பு, நலன் போன்றவற்றுக்கு உழைத்த பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மீண்டும் இந்திய மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். கடந்த 60 வருடங்களில் முதல்முறையாக இது நடந்துள்ளது. இதனால் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுகிறது.
வெளியுறவுக் கொள்கையில் முதுகெலும்பு உள்ள ஒரு இந்திய அரசை சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக உலகம் காண்கிறது. 60 கோடி இந்தியர்களுக்கு வீடுகள், கழிவறைகள், எரிவாயு இணைப்பு, குடிநீர், மின் இணைப்பு, 5 கிலோ இலவச ரேஷன், மருத்துவ சேவைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்குள் இந்தியாவில் சொந்த வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் இலக்கு. மேக் இன் இந்தியா திட்டத்தால் உலகின் மிகவும் விரும்பத்தக்க உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது இந்தியா. நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் நாட்டில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன’ என்றார்.