
நான் ஸோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன் என்று அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது புதிய மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துள்ளார்.
மத்திய அரசு சுயசார்பு இந்தியா கொள்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாக சமீபத்தில் மத்திய கல்வித்துறையில் இனி அனைத்து ஆவணங்களும் இந்திய தயாரிப்பான ஸோஹோவின் அலுவல் தொகுப்பான ’ஸோஹோ ஆஃபீஸ் சூட்’ மூலம் மட்டுமே தயாரிக்கப்படவும் திருத்தப்படவும் பகிரப்படவும் வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், நாட்டின் தொழில்நுட்ப இறையாண்மையை வலுப்படுத்தும் வகையில் சுயசார்பு இந்தியா கொள்கைக்காக சுதேசி இயக்கத்தின் அடிப்படையில் ஸோஹோ ஆஃபீஸ் சூட் மென்பொருளை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸோஹோ மெயிலுக்கு மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஸோஹோ மெயில் பாதுகாப்பான, விளம்பரம் அற்ற மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது. வலுவான தனியுரிமைக் கோட்பாடுகள் மற்றும் தகவல் பாதுகாப்பு கொள்கைகளுக்காக அறியப்படும் ஸோஹோ மெயில், குறியாக்கப்பட்ட மின்னஞ்சல்கள், இருமுனை அங்கீகரிப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. ஸோஹோ மெயில் தற்போது ஜிமெயிலுக்கு பதிலாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமித் ஷா வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-
“அனைவருக்கும் வணக்கம். நான் ஸோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். எனது மின்னஞ்சல் முகவரி மாற்றம் கண்டுள்ளதைக் கவனிக்க வேண்டுகிறேன். எனது புதிய மின்னஞ்சல் முகவரி, amitshah.bjp@zohomail.in. வருங்காலத்தில் மின்னஞ்சல் மூலமான தகவல் பரிமாற்றத்திற்கு இதையே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.