
தமிழக பாஜகவில் உள்ள உட்கட்சிப் பூசல்களைக் களைய வேண்டும் என்று தலைவர்களிடம் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இதில் அதிமுகவுடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்திக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தக் கூட்டணி உறுதி ஆன நிலையில், இரு தரப்பும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையில் தமிழக பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசல் முற்றிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன. குறிப்பாக, அண்மையில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்ட பிறகு, முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஒத்துழையாமை போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வானதி சீனிவாசனுக்கும் அண்ணாமலைக்கும் மாற்றுக் கருத்து காரணமாக மோதல் போக்கு நிலவுவதாகவும் பேசப்படுகிறது.
இந்நிலையில், உட்கட்சிப் பூசலைத் தடுக்கும் வகையில் தமிழக நிர்வாகிகளை பாஜக தலைமையகம் அவசரமாக அழைத்து உயர்நிலைக் குழு கூட்டம் நடத்தியது. தில்லியில், இன்று (செப்டம்பர் 3) கிருஷ்ணா மேனன் சாலையில் அமித் ஷாவின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, வானதி சீனிவாசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உட்கட்சிப் பூசலை நீக்க வேண்டியது முக்கியமானது என்று அமித் ஷா அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து அதிகரிப்பது நல்லதல்ல என்றும், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கட்சியில் பூசலுக்கு முக்கிய காரணமாக அண்ணாமலை பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறும் நிலையில், அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும், அதுகுறித்து கேட்டதற்கு திருமண நிகழ்வுகள் போன்ற தனிப்பட்ட வேலைகள் அதிகம் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை என்று அவர் விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.
Annamalai | Amit Shah | TN BJP | TamilNadu BJP | Inter party politics | Nainar Nagenthiran