பிஹார் சர்ச்சைக்கு மத்தியில் மேற்கு வங்க வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையம் முடிவு | West Bengal | ECI

இது சிறப்பு தீவிர திருத்தம் என்று அழைக்கப்படுமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் முந்தைய தேர்தல்களைப்போலவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும்.
பிஹார் சர்ச்சைக்கு மத்தியில் மேற்கு வங்க வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையம் முடிவு | West Bengal | ECI
ANI
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம், சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேவையான ஏற்பாடுகளை முடுக்கிவிடுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 27 அன்று மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) மனோஜ் அகர்வால் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் (DEO) வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில், காலியாக உள்ள அனைத்து தேர்தல் பதிவு அதிகாரி (ERO) மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரி (AERO) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டு ஆகஸ்ட் 26 அன்று தலைமைச் செயலாளர் மனோஜ் பந்திற்கு ஒரு தனி கடிதத்தை மனோஜ் அகர்வால் அனுப்பியுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

வரும் 2026 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்வைத்து தற்போது முன்மொழியப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சி குறித்து நாளை (ஆக. 29) அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அகர்வால் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திடம் பேசியுள்ள தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர், `இது SIR (சிறப்பு தீவிர திருத்தம்) என்று அழைக்கப்படுமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் முந்தைய தேர்தல்களைப் போலவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும்’ என்றார்.

பருய்பூர் பூர்பா மற்றும் மொய்னா சட்டப்பேரவைத் தொகுதிகளில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 127 வாக்காளர்களை மோசடியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இரண்டு தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் மற்றும் இரண்டு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து வழக்குப்பதிவு செய்யுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசிடம் மூன்ற வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.

இதைத் தொடர்ந்து, இடைநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலக்கெடுவின் கடைசி நாளான ஆகஸ்ட் 21 அன்று, மாநில அரசு இந்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்தது, ஆனால் அவர்களுக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in