
ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், மஹாராஷ்டிர அமைச்சர் தனஞ்செய் முண்டே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்தாண்டு மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பார்லி தொகுதியில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தனஞ்செய் முண்டே, தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான மஹாராஷ்டிர அரசில் உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 2024-ல் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரான சந்தோஷ் தேஷ்முக் படுகொலை செய்யப்பட்டார். சந்தோஷ் தேஷ்முக் கொலை வழக்கில் தனஞ்செய் முண்டேவுக்கு நெருக்கமான வால்மிகி கரட் என்பவர் குற்றம்சாட்டப்பட்டார்.
பீட் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள தனஞ்செய் முண்டேவுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டும் வகையிலான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பதவியை முண்டே ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை இன்று (மார்ச் 4) முதல்வர் தேவேந்திர பட்னவீஸிடம் அளித்துள்ளார் தனஞ்செய் முண்டே. கடந்த சில நாட்களாக தனக்கு உடல்நிலை கோளாறு இருப்பதாகவும், சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அதேநேரம், சந்தோஷ் தேஷ்முக் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் முண்டே.