பஹல்காம் தாக்குதல்: இன்று (ஏப்.24) மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் - கோப்புப்படம்
அனைத்துக் கட்சிக் கூட்டம் - கோப்புப்படம்ANI
1 min read

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று (ஏப்.24) மாலை 6 மணி அளவில் தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் நேற்றைக்கு முந்தைய தினம் (ஏப்.22) நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் இயங்கிவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான `தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்’ இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

எல்லைதாண்டிய தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்ததால் பாகிஸ்தான் உடனான தூதரகரீதியிலான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர நேற்று (ஏப்.23) மாலை நடைபெற்ற பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான கண்டனத்தைத் தெரிவிக்க இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் வழங்கப்பட்டது.

அத்துடன் தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தை முடக்கி, எக்ஸ் தள நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் மற்றும் அது சார்ந்து மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவரிக்கவும், ஆலோசனை மேற்கொள்ளவும் இன்று (ஏப்.24) மாலை 6 மணிக்கு தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையேற்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in