குஜராத்தில் எல்லா அமைச்சர்களும் ராஜினாமா எனத் தகவல்! | Gujarat Cabinet |

வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் அமித் ஷா, ஜெ.பி. நட்டா முன்னிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் எல்லா அமைச்சர்களும் ராஜினாமா எனத் தகவல்! | Gujarat Cabinet |
ANI
1 min read

குஜராத்தில் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. இவர் தலைமையிலான ஆட்சியில் மொத்தம் 17 பேர் அமைச்சர்களாக (பூபேந்திர படேல் உள்பட) உள்ளார்கள். 2027 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருகிறது.

இதன்படி, குஜராத்தில் அக்டோபர் 17 அன்று அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் அமைச்சரவை மாற்றத்தை மேற்பார்வை செய்கிறார்கள்.

அமைச்சரவை மாற்றத்தில் புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையிலுள்ள 50 சதவீதத்தினருக்கு மேற்பட்டவர்கள் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமைச்சரவையிலுள்ள மொத்த அமைச்சர்களும் பூபேந்திர படேலிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பூபேந்திர படேல், அமைச்சரவையைப் புதிதாக மாற்றியமைக்க ஏதுவாக அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) சுனில் பன்சால் மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் இன்று பிற்பகலுக்கு மேல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகே இந்த நகர்வு அரங்கேறியுள்ளது.

அனைவருடைய ராஜினாமா கடிதத்தையும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஏற்றுக்கொண்டார். தற்போதைய நிலையில் முதல்வர் பூபேந்திர படேல் மட்டுமே அமைச்சரவையில் ஒற்றை உறுப்பினராக உள்ளார். புதிய அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து பூபேந்திர படேல் இன்றிரவுக்குள் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் அமித் ஷா மற்றும் ஜெ.பி. நட்டா முன்னிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் பலம் 182. இதன்படி, அம்மாநில அமைச்சரவையில் 27 பேர் வரை இடம்பெறலாம். அல்லது சட்டப்பேரவையின் மொத்த பலத்தில் 15 சதவீதத்தினர் வரை இடம்பெறலாம்.

முன்னதாக, சுனில் பன்சால் மற்றும் பூபேந்திர படேல் ஆகியோர் அமைச்சர்கள் எல்லோரையும் தனித்தனியாகச் சந்தித்து பாஜக மத்தியத் தலைமையின் முடிவு குறித்து தெரிவித்து, ராஜினாமா கடிதத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

Gujarat Cabinet | Cabinet Reshuffle | Gujarat Cabinet Reshuffle | Gujarat BJP | Gujarat | Bhupendra Patel | Amit Shah | JP Nadda |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in