கேரளத்தில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது. 225 பேர் இன்னும் காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நிலச்சரிவு குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் அவர் பேசியதாவது:
"உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கல்கள். இந்த நாட்டுக்கு ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படுவது தொடர்பாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஜூலை 23-ல் கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு 7 நாள்களுக்கு முன்பு கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிறகு ஜூலை 24, 25-ல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜூலை 26-ல் 20 செ.மீ. அளவுக்கு மேல் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்படலாம், இதில் உயிரிழப்புகள் நிகழலாம் என்று எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படுவது குறித்து கேள்விகள் வருகின்றன. 2014-க்கு பிறகு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்கான அமைப்பு முறைக்காக அரசு ரூ. 2 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. இதன் வழியில் ஜூலை 23-ல் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் என்னுடைய வழிகாட்டுதலின் பெயரில் 9 தேசியப் பேரிடர் மீட்புப் படை கேரளம் விரைந்துள்ளது.
கேரள அரசு என்ன செய்துகொண்டிருந்தது? மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்களா? அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்ததால் எப்படி உயிரிழந்திருப்பார்கள்? முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்கான திட்டம் என்பது 2016-ல் தொடங்கப்பட்டது. 2023-ல் இதற்கான மிகவும் நவீன முறை இந்தியாவிடம் தற்போது உள்ளது. 7 நாள்களுக்கு முன்பு கணிக்கக்கூடிய முறை 4 நாடுகளில் மட்டுமே உள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று" என்றார் அமித் ஷா.