
பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி வரும் செப்.17-ல் 4000 கிலோ சைவ உணவு அன்னதானமாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
`பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, 550 வருடங்களுக்கும் மேலாக கடைபிடிக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றி அஜ்மீர் தர்காவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் உலகப்புகழ் பெற்ற பெரிய ஷாஹி டெக்கில் (பாத்திரம்), 4000 கிலோ அளவுக்கு சைவ உணவு சமைக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்படும்’ என்று தர்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
`க்வாஜா மொய்னுதின் சிஷ்டி தர்காவுக்குள் உள்ள பெரிய ஷாஹி டெக்கில் இரவு 10.30 மணி அளவில் தீ மூட்டப்பட்டு சமையல் வேலை தொடங்கும். அமைதி, ஒற்றுமை, செழிப்பு போன்றவை நிலவவும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆரோக்கியத்துக்காகவும் சிறப்புத் தொழுகை நடத்தப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
`பிரதமர் மோடியின் பிறந்தநாளில் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டிடங்களில் சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அவரது பிறந்தநாளுக்காக அரிசி, நெய், உலர் பழங்கள் போன்றவற்றை உபயோகித்து 4000 கிலோ அளவுக்கான சைவ உணவு தயாரிக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்படும்.
குருமார்கள், ஏழை மக்கள் உள்ளிட்டோருக்கும் இவை வழங்கப்படும். பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ நாங்கள் பிராத்தனை செய்வோம். இந்திய சிறுபான்மையினர் தன்னார்வ அமைப்பும், சிஷ்டி தன்னார்வ அமைப்பும் இணைந்து இந்த அன்னதானத்தை ஏற்பாடு செய்துள்ளன’ என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார் அஜ்மீர் தர்கா நிர்வாகியான சையத் ஆஃப்கன் சிஷ்டி.