25 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கு: அஜித் பவார் மனைவி உள்பட அனைவரும் விடுவிப்பு

மஹாராஷ்டிர மாநிலம் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார்.
25 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கு: அஜித் பவார் மனைவி உள்பட அனைவரும் விடுவிப்பு
1 min read

25 ஆயிரம் கோடி எம்எஸ்சிபி வங்கி முறைகேடு வழக்கிலிருந்து மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

மஹாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கில் மும்பை காவல் துறையின் பொருளாதாரப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் முடித்துவைப்பதற்கான அறிக்கையை மும்பை காவல் துறையின் பொருளாதாரப் பிரிவு கடந்த ஜனவரில் தாக்கல் செய்துள்ளது. இது தற்போது வெளியாகியிருக்கிறது.

சுனேத்ரா பவார் மற்றும் அவரது கணவர் அஜித் பவாருக்குத் தொடர்புடைய பணப் பரிமாற்றத்தில் எந்தக் குற்றமும் செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் வழங்கிய நடைமுறையாலும், ஜரண்டேஷ்வர் சர்க்கரை ஆலையை விற்பனை செய்ததாலும் வங்கி எந்தவொரு இழப்பையும் சந்திக்கவில்லை என்றும் மும்பை காவல் துறையின் பொருளாதாரப் பிரிவால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பவார் குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியான பாராமதியில் சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கிய அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்தார். இந்தக் கூட்டணியில் மஹாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in