அஜித்பவார் vs ஃபட்னாவிஸ்: யோகி ஆதித்யநாத் கோஷத்தால் கூட்டணியில் உருவான குழப்பம்!

இந்த கோஷத்துக்கு நான் உடன்படவில்லை என ஏற்கனவே பொது மேடைகளிலும், தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் தெரிவித்துவிட்டேன்.
அஜித்பவார் vs ஃபட்னாவிஸ்: யோகி ஆதித்யநாத் கோஷத்தால் கூட்டணியில் உருவான குழப்பம்!
ANI
1 min read

மஹாராஷ்டிரா சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பரப்புரையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எழுப்பிய கோஷத்தால் ஆளும் மஹாயுதி கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.

வரும் நவம்பர் 20-ல் மஹாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதை ஒட்டி அங்கே தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய கட்சிகள் மஹாயுதி கூட்டணி என்ற பெயரில் தேர்தலை இணைந்து சந்திக்கின்றன.

இந்நிலையில், ஆளும் மஹாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மஹாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், `நாம் (ஹிந்துக்கள்) ஒன்றுபடாவிட்டால் நம் தலை துண்டிக்கப்பட்டுவிடும்’ என கோஷம் எழுப்பினார்.

யோகி ஆதித்யநாத்தின் கோஷம் மதரீதியிலான குழப்பத்தை ஏற்படும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் ஆளும் மஹாயுதி கூட்டணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில நிதியமைச்சருமான அஜித் பவாரும், யோகி ஆதித்யநாத்தின் கோஷத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், `இந்த கோஷத்துக்கு நான் உடன்படவில்லை என ஏற்கனவே பொது மேடைகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் தெரிவித்துவிட்டேன். சில பாஜக தலைவர்களும் இந்த கோஷத்துக்கு கருத்துக்கு உடன்படவில்லை. உடனடியாக இது உத்தர பிரதேசம் அல்ல என தெரிவித்தோம். இது போன்றவை வடக்கில் நடைபெறலாம், எங்கள் மஹாராஷ்டிராவில் அல்ல’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள பாஜக தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், `யோகி ஆதித்யநாத்தின் கோஷத்தில் எந்த தவறும் இல்லை. பல காலமாக ஹிந்துக்களுக்கு எதிராக கருத்துகள் நிலவி வந்த இடத்தில் அவர் (அஜித் பவார்) இருந்தார். பொதுமக்களின் மனநிலையை புரிந்துகொள்ள அவருக்கு சில காலம் ஆகும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in