
டேடா இல்லாத அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைக்கானப் பிரத்யேகத் திட்டங்களை ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைக்கெனப் பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டும் என டிராய் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இணங்க ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் டேடா சேவை இல்லாத புதிய திட்டங்களை அறிமுகம் செய்தன. இவற்றுக்கான கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் இதற்கென இரு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 365 நாள்களுக்கான அன்லிமிடெட் அழைப்பு வசதி மற்றும் 3,600 குறுஞ்செய்திகளை இலவசமாக அனுப்புவதற்கு ஏற்ப, ரூ. 1,849-க்கு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அடுத்து 84 நாள்களுக்கான அன்லிமிடெட் அழைப்பு வசதி மற்றும் 900 குறுஞ்செய்திகளை இலவசமாக அனுப்புவதற்கு ஏற்ப, ரூ. 469-க்கு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ
ஜியோ நிறுவனமும் இதே போல இரு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், ஏர்டெலை காட்டிலும் விலையும் வேலிடிடியும் சற்று குறைவு.
336 நாள்களுக்கான அன்லிமிடெட் அழைப்பு வசதி மற்றும் 3,600 இலவச குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு ஏற்ப ரூ. 1,758-க்கு ஒரு திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
அடுத்தது, 84 நாள்களுக்கான அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 1,000 குறுஞ்செய்திகளை இலவசமாக அனுப்புவதற்கு ஏற்ப ரூ. 448-க்கு ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விஐ
வோடஃபோன் ஐடியா எனும் விஐ நிறுவனம் 270 நாள்களுக்கான அன்லிமிடெட் அழைப்பு வசதி மற்றும் நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகளை இலவசமாக அனுப்புவதற்கு வசதியாக ரூ. 1,460-க்கு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதிய ரீசார்ஜ் திட்டங்களை டிராய் ஆய்வுக்குட்படுத்தவுள்ளது. இதன் பிறகு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் கட்டணத்தில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மேலும், தற்போது நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்களில், இந்நிறுவனங்கள் கூடுதல் பலன்களையும் வழங்குகின்றன.