
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவைகளை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் ஸ்டார்லிங்க் சாதனங்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
பாரதி ஏர்டெலின் நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான கோபால் விட்டல் கூறுகையில், "இந்தியாவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஸ்டார்லிங்க் இணைய சேவைகளை வழங்குவது என்பது குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல். ஸ்பேஸ்எக்ஸ் உடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் கிராமப்புற, மலைப் பகுதிகளில் கூட அதிகவேக இணைய சேவைகளை வழங்க முடியும். தனிநபர், தொழில்புரிவோர் என அனைத்துத் தரப்பினருக்கும் நிலையான இணைய சேவை உறுதிப்படுத்தப்படுகிறது" என்றார்.
ரிலையன்ஸ் ஜியோ குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் மேத்யூ ஊமென் கூறுகையில், "ஒவ்வொரு இந்தியருக்கும் அவர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும் சரி, அவர்களுக்கும் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையை உறுதி செய்ய வேண்டும் என்பது ஜியோவின் முன்னுரிமையாக உள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் உடனான இந்த கைக்கோர்ப்பு மூலம் ஸ்டார்லிங்கை இந்தியாவுக்குள் கொண்டு வருவதன் வழியாக எங்களுடைய உறுதிப்பாடு வலிமை பெறுகிறது" என்றார்.
ஸ்டார்லிங்க் ஊடாக செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவைகளை வழங்க முடியும். செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்குவது மூலம், நகர்ப்புறங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த அதிவேக இணைய சேவைகள் இனி கிராமப்புறங்களையும் மலைப் பகுதிகளையும் சென்றடையும்.