
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போர் பதற்றத்தால் மூடப்பட்ட 32 விமானங்களில், விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை தொடங்கின. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கும் சூழல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆதம்பூர், அம்பாலா, அம்ரித்சர், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குல்லு மணாலி, லே, லுதியானா, முந்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட், சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ், உத்தர்லாய் ஆகிய 32 விமான நிலையங்களில் மே 15 வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள இரு தரப்பும் முடிவு செய்ததாக, மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கடந்த மே 10 அன்று மாலை 6 மணியளவில் அறிவித்தார்.
இந்நிலையில், மூடப்பட்ட விமான நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக எக்ஸ் கணக்கில் இந்திய விமான நிலைய ஆணையம் இன்று (மே 12) வெளியிட்ட பதிவில்,
`சிவில் விமானப் போக்குவரத்திற்காக 32 விமான நிலையங்கள் மே 15 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இந்த விமான நிலையங்கள் சிவில் விமான போக்குவரத்துக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளன. விமானங்களின் இயக்கம் குறித்து விமான நிறுவனங்களுடன் நேரடியாக சரிபார்த்து, சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனத்தின் இணையதளங்களைப் பார்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.