
பாதுகாப்புப் படைகளுக்கு சொந்தமான விமான நிலையங்கள், குறிப்பாக நாட்டின் மேற்கு எல்லைக்கு அருகில் உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்படும்போதும், அவற்றில் தரையிறங்கும்போதும் விமானங்களின் ஜன்னல்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வணிக விமான நிறுவனங்களுக்கும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
விமானங்கள் புறப்பட்ட பிறகு வானில் 10,000 அடி உயரத்தை எட்டும் வரையிலும், வானில் அந்த உயரத்திற்கு இருந்து தரையிறங்கும் வரையிலும் இந்த விதி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிக்கான விதிவிலக்கு, விமானங்களில் உள்ள அவசரகால வெளியேறும் வரிசைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதியில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதல் முடிவுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, வெளியாகியுள்ளதால் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பொதுமக்கள், பாதுகாப்புப் படைகள் என இரு தரப்பினருக்குமான இரட்டை பயன்பாட்டு விமான நிலையங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புப் படைகளுக்குச் சொந்தமான விமானநிலையங்களில் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யுமாறு, விமான நிறுவனங்களிடம் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
லே, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், ஆதம்பூர், சண்டிகர், பதிண்டா, ஜெய்சல்மேர், நால், ஜோத்பூர், ஹிண்டோன், பூஜ், கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்த சுமார் 32 விமான நிலையங்கள் சில நாள்களுக்கு மூடப்பட்டிருந்தன.