
இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றான அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குறைந்தது 274 பேர் கொல்லப்பட்டதாக இன்று (ஜூன் 14) செய்தி வெளியாகியுள்ளது.
நேற்றைக்கு முந்தைய தினம் (ஜூன் 12) குஜராத்தின் அஹமதாபாத்தில் இருந்து பயணிகள், விமானப் பணியாளர்கள் என 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான AI-171 விமானம், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாகவே அருகில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இன்று (ஜூன் 14) வெளியாகியுள்ளன. இதன்படி, விபத்து நடந்ததும் விமானத்தில் இருந்து குதித்து வெளியேறி தப்பித்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் தவிர, விமானத்திற்குள் இருந்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
உடல்களை சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்து நடைபெற்ற 28 மணி நேரம் கழித்து, மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவகம் அமைந்திருந்த இடத்திற்கு மேலே இருந்து விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக, நேற்று (ஜூன் 14) ஆஹமதாபாத் காவல் இணை ஆணையர் நீரஜ் பத்குஜார் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கருப்பு பெட்டி கண்டறியப்பட்ட தகவலை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தன் எக்ஸ் கணக்கில் அறிவித்தார். விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய இது உதவும் என்று அவர் தகவல் தெரிவித்தார். அதேநேரம் விபத்து நடைபெற்ற தினத்தன்றே விமானத்தின் டிரான்ஸ்மிட்டர், கண்டறியப்பட்டது.